தமிழக சட்டமன்றத்திற்கான புதிய வளாகம் இன்று மாலை திறந்து வைக்கப்படுகிறது. பிரமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய சட்டமன்ற வளாகம் ரூபாய் 450 கோடி செலிவல் பிரமாண்டமாய் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட கட்டடப் பணிகள் விரைந்து மேற்கெள்ளப்பட்டன.
புதிய சட்டமன்ற வளாகத்தைத் திறந்து வைப்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் சனிக்கிழமை மாலை 4.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அவருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் வருகிறார். 5 மணிக்கு விழா நடக்கும் இடத்திற்கு பிரதமரும் சோனியாவும் வருகின்றனர்.
தமிழக முதல்வர் கருணாநிதி திறப்பு விழாவிற்கு தலைமை தாங்குகிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி மற்றும் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பிரதமர் மன்மோகன் சிங் புதிய சட்டமன்ற வளாகத்தைத் திறந்து வைக்கிறார்.
இவ்விழாவில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ஆந்திர முதல்வர் ரோசைய்யா, புதுவை முதல்வர் வைத்திலிங்கம் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொல்கின்றனர்.
திறப்பு விழாவை ஒட்டி புதிய தலைமைச் செயலக வளாகம் மற்றும் அண்ணா சாலை ஆகிய இடங்கள் விழாக் கோலம் பூண்டுள்ளன. விழா நடக்கும் இடம் காவல்துறையின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 5 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.





